கோடையில் ஒருநாள்
ஒவ்வொரு நாளும் காட்டிற்குள் செல்லும்போது அதன் அழகைப்பற்றி அழகாக எழுத வேண்டும் என்று ஒவ்வொருவரின் மனதிலும் ஆசை இருக்கத்தான் செய்யும். என் மனதிற்குள்ளும் அந்த ஆசை இருந்தது. அதற்கான நேரம் கிடைக்கவில்லை என்று சொல்வது சரியாகாது. நேரத்தை அதற்காக ஒதுக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இன்று அதற்காக சிறிது நேரம் ஒதுக்கி எனது பயணத்தின் அனுபவத்தை கதையாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
மே மாதத்தில் ஒருநாள் காலை சுமார் 11 மணி அளவில், கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் தீ ஏற்படுகிறதா என்பதை கண்காணித்து பாதுகாப்பு பணியினை மேற்கொள்ள ரோந்துப்பணி செல்லலாம் என்று நாங்கள் கிளம்பினோம். வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும் என்பதை மனதில் கொண்டு கையோடு மதிய உணவையும் தண்ணீரையும் எடுத்துக் கொண்டோம். நாங்கள் நினைத்தது போலவே சூரியன் எங்களை சுட்டெரிக்க தயாராகவே இருந்தது. வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் பகல் நேரத்தில் வெளியே செல்லவேண்டாம் என்று பொதுமக்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது நினைவில் வந்தது. இந்த எச்சரிக்கை வன சீருடைப்பணியாளர்களுக்கும் கிடைக்குமா என்ற ஏக்கத்தோடு சூரியனைப்பார்த்து வெப்பத்தால் தலைகுனிந்து இல்லை இல்லை வெட்கத்தால் தலைகுனிந்து புறப்பட தயாரானோம். கடைநிலை ஊழியர்களுக்கு வாகன வசதியோ எரிபொருளோ அரசால் வழங்கப்படுவதில்லை இருப்பினும் எங்களது சொந்த வாகனத்தில் புறப்பட்டு வனப்பகுதியை அடைந்ததும் சற்று ஓரமாக வாகனத்தை நிறுத்திவி்ட்டு நடக்க ஆரம்பித்தோம்.
நாங்கள் நினைத்தது போலவே வெயிலின் தாக்கம் அதிகமாகத்தான் இருந்தது. சுட்டெரிக்கும் வெயில் எங்களை சீண்டிப் பார்த்தாலும் அசராமல் அஞ்சாமல் ஆளுக்கு ஒரு திசையாக செல்லாமல் ஒன்றாகவே சென்றோம் காரணம் இருவர் மட்டுமே என்பதால். ஏதாவது அசம்பாவிதம் நடந்தாலும் எங்களுக்கு உதவ ஆளில்லை. உடனே தகவல் தெரிவிக்கவும் வழி இல்லை. ஏற்கனவே வெயிலின் கொடுமையால் பலரும் முடங்கிக் கிடக்க வனப்பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாங்கள் கலைப்போடு இருந்தாலும் சலிப்பில்லாமல் நடந்து சென்றோம். வனத்தில் நடந்து செல்வது ஒரு வரம் தான். ஆனால் கோடைகாலத்தில் நடப்பது என்பது... விவரிக்கமுடியாத ஒன்று...
பறவைகளின் ஓசை, பூச்சிகளின் ரீங்காரம், இயற்கை காற்றின் சுகம், மரநிழலில் நடப்பது என பல அனுபவங்களை கோடைகாலம் தவிர்த்து மற்ற நாட்களில் அனுபவித்தது மனக்கண்ணில் வந்து சென்றது.
எங்களை வரவேற்க வனப்பகுதி வளமான இயற்கையோடு இல்லை என்றாலும் ஒரு சில இடங்களில் இருந்த மரங்கள் பசுமையாக காட்சியளித்தன. என்ன பசுமையான மரங்களா இப்போது என்று எண்ண வேண்டாம். நீரோடையின் அருகே இருந்த புங்க மரங்கள் எங்களை புன்னகை பூத்து வரவேற்றன. காய்ந்த சருகுகள் கண்ணெதிரே தெரிந்தாலும் பசுமையான மரங்களும் ஓடை ஓரத்தில் இருக்கத்தான் செய்தன. ஓடை ஆங்காங்கே நீரின்றி வறண்டும் ஒருசில இடங்களில் உள்ள பள்ளங்களில் சிறிதளவு தண்ணீரோடும் காட்சியளித்தது. அந்த தண்ணீர்தான் அப்பகுதியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஆதாரம். அந்நியர் வருவதை அறிந்து அச்சத்தில் ஒரு சில பறவைகள் ஒலி எழுப்பினாலும் அதையும் ரசித்துக் கொண்டே நடந்துசென்றோம் வெயிலின் தாக்கத்தோடு. எங்கோ ஒரு காகம் தன் இனத்தை அழைத்தது எங்கள் காதில் கேட்டது. தொடர்ந்து எங்கள் பயணம்.
குரங்குகளும் மனிதர்களைக் கண்டால் பயந்தோடும் என்பதை வனப்பகுதிக்கு உள்ளே இருக்கும் குரங்குகளை பார்க்கும் பொழுது புரிந்தது. ஆனால் வனப்பகுதிக்கு வெளியே உள்ள குரங்குகள் ஏன் வனத்தில் ஒருசில இடங்களில் உள்ள குரங்குகளும் மனிதர்களை கண்டால் பயப்படுவது இல்லை. மனிதர்கள்தான் அவற்றைக்கண்டு பயப்படுகின்றனர். அதற்கு காரணம் மனிதர்களாகிய நாம்தான். நாம் உண்ணும் உணவுப்பொருட்களை குரங்குகளுக்கு அளித்து அவற்றின் குணாதிசயத்தை மாற்றிவிட்டோம். அது தனிக்கதை அதனை பிறகு பார்க்கலாம்.
நடந்துகொண்டே வந்த களைப்பு ஒருபுறம் வெயிலின் தாக்கம் மறுபுறம் என்பதால் மதிய உணவை முடித்துக்கொண்டு சிறிது ஓய்வு எடுக்கலாம் என்று எண்ணிக்கொண்டே நடந்தபோது ஓடையின் அருகே நிழலான ஓர் இடம் கண்ணில் பட்டது. சிறிய பள்ளத்தில் தண்ணீரும் இருந்தது. சிறிது நேரம் அமர்ந்து பின் மதிய உணவை முடித்து விட்டோம். உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்று சொல்வார்கள் அதற்கு ஏற்றார் போல் உடனே நடக்காமல் சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று மரத்தின் அடியில் கண்மூடி அமைதியாய் ஓய்வெடுத்தோம்.
வனப்பகுதியில் நடக்கும் நிகழ்வுகளை அமைதியாக கேட்பதில் என்ன ஒரு ஆனந்தம். சருகுகள் காற்றில் நகர்வதும் ஒய்யாரமாய் ரீங்காரமிடும் தேனீக்களின் ஓசையும் கேட்கமுடிந்தது. காற்றின் அசைவில் மரங்களில் இருந்த இலைகள் மண்ணில் விழுந்ததை உணர முடிந்தது. பல்வேறு திசைகளில் இருந்தும் பறவைகள் ஒலி எழுப்பியதை இங்கிருந்தே உணரமுடிந்தது. அப்படியே அமர்ந்துகொண்டிருக்கலாம் என்று அடிமனதில் ஆசை இருந்தது. நாங்கள் பாறை மீது அமர்ந்திருந்ததால் அந்த பாறை காலையில் இருந்து சூரியனிடமிருந்து உள்வாங்கிய வெப்பத்தை எங்கள் மீது சிறிதுசிறிதாக உமிழ்ந்து கொண்டிருந்தது. அதனை பொருட்படுத்தாமல் அமர்ந்திருந்தபோது எறும்புகள் எங்களை அந்த இடத்தை விட்டு எழுப்பிவிட்டன.