தூதுவளை (Solanum trilobatum)
Kingdom: Plantae(unranked): Angiosperms
(unranked): Eudicots
(unranked): Asterids
Order : Solanales
Family : Solanaceae
Genus : Solanum
Species : S. trilobatum
தூதுவளை (Solanum trilobatum) என்பது மூலிகையாகப் பயன்படும் ஒருவகை கொடியாகும். இது ஈரமான இடங்களில் செழித்துப் புதர் போல நன்கு வளர்ந்து காணப்படும். இதன் இலையானது சற்று கரும்பச்சை நிறம்கொண்டது. இதனுடைய பூ ஊதா நிறம்கொண்டது. தூதுவளையில் சிறிய காய்கள் தோன்றிப் பழுக்கும். இதன் கொடி மற்றும் இலையில் சிறிய முட்கள் காணப்படும். முடிந்தவரை முட்களை அகற்றிவிடுவது நல்லது
தூதுவளை பெரும்பாலும் இந்தியாவில் அனைத்து இடங்களிலும் கிடைக்கும் மூலிகைகளில் ஒன்றாகும். இதற்கு சிங்கவல்லி, அளர்க்கம் என்ற வேறு பெயர்களும் உண்டு. இதன் இலை, காய், பூ, பழம் என அனைத்தும் மருத்துவ குணம் உடையது.
தூதுவே ளையையுணத் தொக்கினிற் றொக்கிய
வேதையா நொயெலா மெய்யைவிட் டகலுமே
(தேரையர் காண்டம்)
என தூதுவளையைப்பற்றி கூறப்பட்டுள்ளது
தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும். எவ்வாறெல்லாம் சமைப்பது என்பது பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும்,பற்களையும் பலப்படுத்தும்.
தூதுவளையை நன்கு அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும்.
காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்தாகும்.
மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நீர், போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்து.
தூதுவளைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து அருந்தி வந்தால் ஆண்மையைப் பெருக்கி உடலுக்கு வலு கொடுக்கும்.
வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும், நோய் தீர்க்கவும் பயன்படும். இம்முறையில் பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் வராமல் நுரையீரல் பாதுகாக்கப்படும். தூதுவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைகின்றன. இதனால் நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.
தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும்.
தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம்.
ஒரு சில உணவு தயாரிப்பு முறைகளைப்பற்றி பார்ப்போம்
எளியமுறையில் தூதுவளை இலையைக்கொண்டு ரசம் வைப்பது எவ்வாறு என்பதைப்பற்றி பார்க்கலாம்
தூதுவளை - ரசம்
தேவையான பொருட்கள்
தூதுவளை இலை - ஒரு கையளவு (அதாவது இலைகள் 40 - 50 )
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
பூண்டு - பெரிய பல் 5 - 6
பெருங்காயம் -தேவையான அளவு (கால் தேக்கரண்டி)
புளி - சிறிதளவு (அதாவது ஒரு பெரு நெல்லிக்காய் அளவு)
கடுகு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
புதினா - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மிளகாய் வத்தல் - 4 பெரியது
கொத்த மல்லி - தேவையான அளவு
செய்முறை:
வழக்கமாக வீட்டில் ரசம் வைக்க பயன்படுத்தும் பாத்திரத்தில் எண்ணையை ஊற்றி மிளகு, சீரகம், பூண்டு போட்டு தாளிக்கவும். பின்பு அதில் தூதுவளை இலைகளைப் போட்டு நன்கு வதக்கிய பின் அவற்றை மிக்சி அல்லது அம்மியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
புளியை தண்ணீரில் நன்றாக கரைத்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சி அல்லது அம்மியில் ஏற்கனவே அரைத்துள்ளவற்றையும் போட்டு கரைத்துக் கொள்ளவேண்டும்.
பின்னர் மீண்டும் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் ஆகியவற்றை சேர்த்து வதக்கி கரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி கொதி வந்தவுடன் பெருங்காயம், புதினா போட்டு இன்னோரு கொதி கொதிக்க வைத்து கொத்தமல்லி போட்டு இறக்கினால் சூடான தூதுவளை ரசம் தயார். இதை அப்படியே தங்கள் சுவைக்கேற்ப சாப்பிடலாம்.
தூதுவளை துவையல்:
தேவையான பொருட்கள்
1. சுத்தபடுத்திய தூதுவளை கீரை ஒரு கப் (40 50 இலைகள்)
2. கடுகு தேவையான அளவு
3. தோல் நீக்கிய முழு உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி
4. கடலைப் பருப்பு ஒரு தேக்கரண்டி
5. கொத்தமல்லி ஒரு தேக்கரண்டி
6. கொத்தமல்லி தழை தேவையான அளவு
7. இஞ்சி தேவையான அளவு
8. பூண்டு பெரியது 5 6 பல்,
9. காய்ந்த மிளகாய் 3 4
10. புளி சிறிதளவு
11. உப்பு தேவையான அளவு
12. எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
எண்ணெய்யை பாத்திரத்தில் ஊற்றி கடுகு போட்டு தாளித்து பின்னர் அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக வதக்கிவிடவேண்டும். இதனை சிறிது நேரம் ஆறவைத்து பின்னர் மிக்சி அல்லது அம்மியில் அரைத்துக்கொள்ளவேண்டும். துவையல் ரெடி.
அரைத்தபின்னர் தேவையெனில் மீண்டும் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளித்துக்கொள்ளலாம். இவ்வாறு துவையலாக கொடுக்கும்போது குழந்தைகள் இட்லி மற்றும் தோசையுடன் சேர்த்து சாப்பிடுவர்.
No comments:
Post a Comment