வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றுதல்

காப்புக்காட்டிற்குள் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள்
தமிழ்நாடு வனச்சட்டம் (சட்டம் எண் 5/1882) பிரிவு 68 A மற்றும் 1981 வன நிலங்கள் (ஆக்கிரமிப்பு அகற்றும்) விதிகள்.

1. ஆக்கிரமிப்பை அகற்றும் அதிகாரம்
    காப்புக்காட்டில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரம் 1882 -ம் வருடத்திய (Act V of 1882) தமிழ்நாடு வனச்சட்டம் பிரிவு 68 A -இன்படி வனச்சரக அலுவலர் அதிகாரம் பெற்றுள்ளார். (பிரிவு 68 A) 

2. ஆக்கிரமிப்பை அடையாளம் காணுதல்
 F.M.B Sketch (கிராம புல வரைபடம்) RF Notification உடன் இணைந்த அமைப்பு வரைபடம் இவற்றின் உதவியுடன் களத்தணிக்கை மற்றும் நில அளவை செய்து ஆக்கிரமிப்பு ஏற்பட்டுள்ள இடம், எல்லைகள், ஆக்கிரமிப்பின் தன்மை, ஆக்கிரமிப்பு செய்துள்ள பரப்பு இவற்றை காப்புக்காட்டின் அமைப்பு வரைபடத்தில் துல்லியமாகக் குறிக்கவேண்டும்.

3. ஆக்கிரமிப்பாளருக்கு காரணம் காட்டும் அறிவிக்கை
1981 தமிழ்நாடு வன நில ஆக்கிரமிப்புகள் அகற்றும் விதிகள் விதி எண் 2-ன்படி இவ்விதிகளின் இணைப்புப் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் உரிய நில அளவை இணைப்புகளுடன் வனச்சரக அலுவலரால் சம்பந்தப்பட்ட வன நில ஆக்கிரமிப்பாளருக்கு காரணம் காட்டும் அறிவிக்கையை (Show Cause Notice)  சார்பு செய்யவேண்டும்.

4. ஆக்கிரமிப்பாளரின் சமாதானத்தின் மீது மேல்நடவடிக்கை
விதி எண் 2-ன்படி சார்பு செய்யப்பட்ட காரணம் காட்டும் குறிப்பாணை சார்பான தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பாளரிடமிருந்து பெறப்படும் சமாதானம் அல்லது பதிலை வனச்சரக அலுவலர் பரிசீலித்து அது குறித்து உத்தரவை ஆக்கிரமிப்பாளருக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தவேண்டும்.

5. ஆக்கிரமிப்பை அகற்றும் அதிகாரம்
காரணம் காட்டும் குறிப்பாணைக்கு தெரிவிக்கப்பட்ட சமாதானம் ஏற்றுக்கொள்ளப்படாத நிகழ்வில் அத்தகைய உத்தரவு கிடைக்கப்பெற்ற 5 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பைவிட்டு தனது பயிர், கட்டிடங்கள் உள்ளிட்ட உடைமைகளுடன் வனநில ஆக்கிரமிப்பாளர் வெளியேறவேண்டும். அவ்வாறு அவர் செய்யத்தவறும் பட்சத்தில் வனச்சரக அலுவலர் தனது பணியாளர்களைக் கொண்டு ஆக்கிரமிப்பாளரை காட்டைவிட்டு கட்டாயமாக வெளியேற்றுவதுடன் ஆக்கிரமிப்பில் உள்ள அவரது உடைமைகளையும் அரசுக்கு பறிமுதல் செய்யவேண்டும். (1981 தமிழ்நாடு வனநில ஆக்கிரமிப்பு அகற்றும் விதிகள் எண் 2 உபவிதி 2)

    விதி எண் 2-ன்படி அரசுக்கு பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை தமிழ்நாடு வனத்துறை விதித்தொகுப்பில் சொல்லியுள்ளபடி (Tamilnadu Forest Department Code) முடிவு செய்யவேண்டும்.

68 A நோட்டீஸ் மாதிரிப்படிவம் (To download 68 A notice in PDF Format)

1882 ம் வருட தமிழ்நாடு வனச்சட்டம் V வது ஆக்ட் 
சட்டப்பிரிவு 68 A ஒதுக்குக்காடுகள் முதலியவற்றில் உள்ள நிலம் எதனில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் குடிபுகுந்த மனிதரை சுருக்கு முறையில் வெளியேற்றல்: 
(to Summary eviction)
ஒதுக்குக்காடுகளில் உள்ள நிலம் அல்லது அரசாங்கத்தின் கைப்பொறுப்பில் உளடள நிலம் எதனிலும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் குடிபுகுந்த மனிதர் எவரையும் அந்த நிலம் அமைந்துள்ள பிரதேசத்தின் மீது அதிகார வரம்புடைய வனச்சரக அலுவலர் (Forest Range Officer) அந்தஸ்துக்கு குறையாத வனத்துறை அதிகாரி அல்லது வட்டாட்சியர் (Tahsildar) அந்தஸ்துக்கு குறையாத வருவாய்த்துறை அதிகாரியால் வகுத்துரைக்கப்படலாகும் விதத்தில் சுருக்கு (Summary) முறையில் வெளியேற்றப்படலாம். மேலும் அந்த நிலத்தின் மீது விளைவிக்கப்பட்ட பயிர் அல்லது வேறு உற்பத்திப்பொருள் பறிமுதலுக்கு உள்ளாக்கப்படவேண்டும். எழுப்பப்பட்ட கட்டிடம் அல்லது வேறு கட்டுமானம் எதுவும் அல்லது அதன்மீது சேமிக்கப்பட்ட (deposited) எதுவும் கூட பறிமுதலுக்கு உள்ளாக்கப்படவேண்டும். இந்தப்பிரிவின் கீழ் செய்யப்படுகின்ற பறிமுதலானது மேலே குறிப்பிடப்பட்ட அதிகாரியால் முடிவு செய்யப்படவேண்டும் மற்றும் அவ்விதம் பறிமுதல் செய்யப்பட்ட பொருள் எதுவும் வகுத்துரைக்கப்படலாகும் விதத்தில் சேமிக்கப்படுதல் வேண்டும்.
 

மேலும்
(a)எந்த மனிதருக்கும் வகுத்துரைக்கப்படலாகும் விதத்தில் ஒரு அறிவிப்பு கொடுக்கப்பட்டு மற்றும்

 
(b)அந்த அறிவிப்பினைத்தொடர்ந்து விளக்கவுரை எதுவும் (representation, if any) பெறப்பட்டு அது முறைப்படி கவனமாக மேலே குறிப்பிடப்பட்ட அதிகாரியால் ஆராயப்பட்டிருந்தால் (duly considered) ஒழிய
இந்தப்பிரிவின் கீழ் அந்த மனிதரை பாதிக்கின்ற விதத்தில், எதிராக வெளியேற்றுதல் அல்லது முடிவு செய்தல் (eviction or adjudication) உத்தரவு பிறப்பித்தல் கூடாது. 

No comments:

Post a Comment