21.05.2021 ம் தேதி தினத்தந்தி நாளிதழ் செய்தி - கல்வராயன் மலையில் வனத்துறை அதிகாரிகளின் மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிப்பு
சாராய வியாாபாரிகள் 3 பேருக்கு வலைவீச்சு
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள அருவங்காடு என்னுமிடத்தில் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற வனத்துறையினர் சாராய ஊறல் உள்ளதா என தேடிப்பார்த்தபோது சாராய ஊறல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சாராய வியாபாரிகள் வனத்துறையினரின் மோட்டார் சைக்கிள்களை தீ வைத்து எரித்துள்ளனர்.
கல்வராயன் மலையில் வனத்துறையினரின் மீதான தாக்குதல் இது முதன்முறை அல்ல.
இதற்கு முன்னர்
14.04.2021 ம் தேதி கள்ளக்குறிச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட மலைக்கோட்டாலம் வனப்பகுதியில் மணல் அள்ளியதை தட்டிக்கேட்ட வனக்காப்பாளரை மர்ம நபர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது என நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது.
04.11.2020 ம் தேதி செய்தி - சாராய ஊறலை அழித்த வனத்துறையினர் மீது தாக்குதல் 16 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு என்ற செய்தி நாளேடு ஒன்றில் பிரசுரமாகியிருந்தது.
அந்த செய்தியில் வனத்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதோடு அவர்களின் இரு சக்கர வாகனங்களும் தாக்குதலுக்கு உள்ளானதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இதுபோன்ற வனத்துறையினர் மீதான தாக்குதல் சம்பவம் கல்வராயன் மலைப் பகுதியில் ஏற்கனவே நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள சேராப்பட்டு வனச்சரகத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய பொக்லைன் இயந்திரம் எடுத்துவரப்பட்டு அலுவலக வளாகத்தில் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அங்கு வந்த பொதுமக்கள் வனத்துறையினரை தாக்கி அரசுக்கு சொந்தமான கார் கண்ணாடியை உடைத்து, அரசு அலுவலகத்தை சேதப்படுத்தி பொக்லைன் இயந்திரத்தை எடுத்துச்சென்றனர்.
இதேபாேன்று வெள்ளிமலை வனச்சரகத்தில் ஒருமுறை வனசோதனை சாவடி முற்றுகையிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இவ்வாறான தொடரும் தாக்குதல்களால் வனத்துறையினர் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். இவ்வாறு அரசு ஊழியரை தாக்கும் சமூக விரோதிகள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தால் மட்டுமே இதுபோன்ற செயல்கள் நடக்காமல் இருக்கும். பொதுவாக மலைப்பகுதிகளில் போதுமான செல்போன் வசதி கிடையாது. இதனால் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் வனத்துறையினர் தங்களின் அதிகாரிகளுக்கோ அல்லது சக பணியாளர்களுக்கோ தகவல் தெரிவிப்பதிலும் சிரமம் உள்ளது. மருத்துவமனையில் மருத்துவர்களை தாக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கான சட்டம் உள்ளது போன்று அரசுப்பணியில் அரசுப்பணியை செய்யும்போது தாக்குதல் நடத்துபவர்களின் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும். கல்வராயன் மலைப்பகுதியில் பல தருணங்களில் வனப்பணியாளர்களும், அவர்களின் உடைமைகளும் மற்றும் அரசுடைமைகளும் தாக்கப்பட்டுள்ளது தெரிகிறது. அதற்கு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தாக்குதல் மட்டும் நடந்துகொண்டே உள்ளது. இதனால் வனத்தை பாதுகாப்பதில் வனப்பணியாளர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது.
உடைமைகளுக்கு சேதம் ஏற்பட்டதை சரிசெய்யமுடியும் ஆனால் வனப்பணியாளர்களின் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் ............ அரசும் அதிகாரிகளும் முறையான நடவடிக்கை எடுத்து வனப்பணியாளர்களையும் வனத்தையும் காப்பாற்றவேண்டும்.
வரும் முன் காப்போம்.
14.04.2021 ம் தேதி தினமலர் நாளிதழ் செய்தி - வனக்காப்பாளரை தாக்கியதால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட மலைக்கோட்டாலம் வனப்பகுதியில் மணல் அள்ளியதை தட்டிக்கேட்ட வனக்காப்பாளரை மர்ம நபர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த செய்தி கீழே உள்ளது.
மேலே உள்ள செய்தியில் வனக்காப்பாளர் தனது கடமையை செய்ததற்காக தாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. காடுகளின் அழிவால் மனித இனம் பல இன்னல்களை சந்தித்து வருகிறது. உதாரணமாக காடுகளின் அழிவால் மழை அளவு குறைகிறது. இதனால் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது. விவசாயம் பாதிக்கப்படுகிறது, விவசாயம் பாதிக்கப்பட்டால் உணவுப்பற்றாக்குறை ஏற்படும். மனிதன் உயிர் வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்வது மரங்களே என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மரங்களையும் செடி கொடிகளையும் அங்கு வாழும் உயிரினங்களையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் துறை வனத்துறையாகும். ஆரோக்கியமாக மனித இனம் வாழ்வதற்கு காடுகள் அவசியமாகும். பூமியின் பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு அதாவது 33 சதவீதம் காடுகள் இருக்கவேண்டும். இந்த உலகம் மனித இனத்திற்காக மட்டுமே ஆனது அல்ல. அனைத்து உயிரினங்களுக்கும் அதாவது புல் பூண்டு முதல் பெரிய மரங்கள் மற்றும் கண்ணுக்கு புலப்படாத உயிரினங்கள் முதல் யானை திமிங்கலம் போன்ற பெரிய உயிரினங்கள் வரை வாழ்வதற்கானதாகும். இவ்வாறு அதிமுக்கியத்துவம் வாய்ந்த வனப்பகுதியை பாதுகாக்கும் துறையில் பணிபுரிபவர்களை தாக்குவது என்பது மிகவும் துரதிஷ்டவசமானது ஆகும்.
வனங்களை பாதுகாக்கவேண்டும் என்பதற்காக தமிழ்நாடு வனச்சட்டம் 1882 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் முகப்புரையில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள காடுகளை பாதுகாப்பதும், நிர்வகிப்பதும் அவசியமாக இருப்பதால் இச்சட்டம் இயற்றப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 140 ஆண்டுகளுக்கு முன்னரே காடுகளின் அவசியம் உணரப்பட்டு அதற்காக தனிச்சட்டமும் இயற்றப்பட்டுள்ளது.இச்சட்டத்தின் பிரிவு 60 இல் இந்திய தண்டனைச்சட்டத்தில் காட்டப்பட்டுள்ள பொது ஊழியர்களாகவே வன அதிகாரிகளும் கருதப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே வனத்துறையினரை தாக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதே பணியாளர்களின் எதிர்பார்ப்பாகும்.
04.11.2020 ம் தேதி செய்தி - சாராய ஊறலை அழித்த வனத்துறையினர் மீது தாக்குதல் 16 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு என்ற செய்தி நாளேடு ஒன்றில் பிரசுரமாகியிருந்தது. அந்த செய்தியில் வனத்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதோடு அவர்களின் இரு சக்கர வாகனங்களும் தாக்குதலுக்கு உள்ளானதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதனை நாம் சாதாரணமாக இரண்டொரு நாளில் மறந்துவிட்டு அடுத்த செய்தியை படிக்கச் சென்று விடுவோம்.
ஆனால் இங்கே கவனிக்கப்பட வேண்டிய தகவல் என்னவெனில் சாராய ஊறல் சட்டவிரோதமாக வனத்துறைக்கு சொந்தமான வனப்பகுதியில் வைக்கப்பட்டிருந்தது. அதனை அழிப்பது மற்றும் அக்குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவரை கைது செய்வது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பது வனத்துறையினரின் பணியாகும்.
அந்தப் பணியினை அதாவது அவர்களுடைய கடமையை செய்த வனத்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதோடு மட்டுமல்லாமல் அவர்களின் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. மேலும் வனத்துறையினரிடமிருந்து கைபேசியை பறித்த அக்கும்பல் அதில் இருந்த பதிவுகளையும் அழித்துள்ளனர். இச்சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.
இதுபோன்ற வனத்துறையினர் மீதான தாக்குதல் சம்பவம் கல்வராயன் மலைப் பகுதியில் ஏற்கனவே நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள சேராப்பட்டு வனச்சரகத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய பொக்லைன் இயந்திரம் எடுத்துவரப்பட்டு அலுவலக வளாகத்தில் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அங்கு வந்த பொதுமக்கள் வனத்துறையினரை தாக்கி அரசுக்கு சொந்தமான கார் கண்ணாடியை உடைத்து, அரசு அலுவலகத்தை சேதப்படுத்தி பொக்லைன் இயந்திரத்தை எடுத்துச்சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று வெள்ளிமலை வனச்சரகத்தில் ஆக்கிரமிப்பு தொடர்பாக கைது செய்த நபர்களை விடுவிக்கக்கோரி சோதனைச்சாவடி முற்றுகையிடப்பட்டு சேதப்படுத்தப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.
இதேபோன்று விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை வனச்சரகத்தில் டிசம்பர் 2019 மற்றும் ஆகஸ்ட் 2020 ஆகிய மாதங்களில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற வனக்காப்பாளர் ஐ கொலை முயற்சி செய்த சம்பவம் நடந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் உளுந்தூர்பேட்டை சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வனச்சரக அலுவலர் தலைமையிலான குழுவினர் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் மண் பாதை அமைக்கப்பட்டு இருந்தது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சென்றபொழுது அந்த கிராம மக்கள் வனத்துறையினர் மற்றும் அவர்களுடைய வாகனத்தை சிறை பிடித்துக் கொண்டு போராட்டம் செய்து இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக எல்லைக்கு உட்பட்ட தலமலை வனச்சரகத்தில் வனக்காப்பாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் செய்தித்தாளில் வெளிவந்துள்ளது. இதேபோன்று ராமநாதபுரம் அருகே கீழக்கரை வனச்சரக பகுதியில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற வனத்துறை அதிகாரிகளை டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி செய்த சம்பவமும் நடந்துள்ளது. ஊட்டி அருகே சில வருடங்களுக்கு முன்னர் புலி தாக்கி இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு நிவாரணம் கேட்டும் புலியை கொல்லவேண்டும் என்ற கோரிக்கை வைத்தும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது திடீரென பொதுமக்கள் அரசுக்குச் சொந்தமான வனத்துறையினரின் வாகனங்களை அடித்து நொறுக்கியதோடு மட்டுமல்லாமல் தீ வைத்து எரித்த சம்பவம் நடந்தது.
கடந்த 2018 மார்ச் மாதம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட சின்னபிஞ்சூர் காப்புக்காட்டில் வேட்டையில் ஈடுபட்டிருந்தவர்களை பிடிக்க முயற்சி செய்தபோது அவர்கள் வனத்துறையினரை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர்
இதேபோன்று ஜூலை 2020 இல் நீலகிரி வனக்கோட்டத்தில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து குடிசை போடப்பட்டு இருந்தது. அதனை அகற்ற முயன்றபோது அலுவலர்கள் முன்னிலையிலேயே ஊட்டி வனக்காப்பாளர் பொதுமக்களால் தள்ளிவிடப்பட்டார். அதில் அவர் காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வனச்சரகத்தில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற வனப்பணியாளர்களை டிராக்டர் ஏற்றி கொல்லமுயன்ற சம்பவமும் நடந்துள்ளது.
வனத்துறையினரை கண்டித்து பல போராட்டங்கள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்து உள்ளது. அப்போது அதற்கான முடிவு அரசாங்கத்தால் எட்டப்படுகிறது ஆனால் வனத்துறையினர் தாக்குவது என்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். சமீபகாலமாக வனத்துறையினரின் மீதான தாக்குதல் அதிகரித்தவண்ணம் உள்ளதாக தெரியவருகிறது.
வன சீருடைப் பணியாளர்களுக்கு வனத்தில் தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாது இரவு பகல் பாராது பணியாற்றுகின்றனர். வன உயிரினங்களால் தாக்கப்பட்டு பல வன சீருடைப் பணியாளர்கள் தங்கள் பணியின் போது உயிரிழந்த சம்பவம் எத்தனையோ நடைபெற்று உள்ளது. இதனை அங்கீகரிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு வனத்தியாகிகள் தினத்தை கடைபிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலே குறிப்பிடப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் ஒரு சில உதாரணங்கள் மட்டுமே எத்தனையோ வனப் பணியாளர்கள் தங்களுக்கு சமூக விரோதிகளால் நேர்ந்த பல இன்னல்களை வெளியில் கொண்டுவருவது இல்லை. நாளிதழ்களில் வந்த செய்தி சிறிதளவு மட்டுமே. இது இல்லாமல் பல நிகழ்வுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இதுபோன்ற தாக்குதல் சம்பவம் நடைபெறாமல் இருக்க தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும். அரசும் இதற்கு தனிக்கவனம் செலுத்தவேண்டும் என்பதே வனப்பணியாளர்களின் எண்ணமாக உள்ளது.
வனத்துறையினரின் பணி என்பது அவசியமான ஒன்றாகும் தமிழ்நாடு மட்டுமல்லாமல் வனத்துறையினர் மீதான தாக்குதல் பல அண்டை மாநிலங்களிலும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பர் மாதம் 2019 வேலூர் வனத்துறை அதிகாரிகள் சந்தன மரம் கடத்தும் கும்பலை சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டு அதற்கான செய்தியும் வெளியிடப்பட்டிருந்தது சுட்டு பிடிக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பதையும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் ஆனால் அப்படி துப்பாக்கி சூடு சம்பவம் ஏதும் நடக்கவில்லை. வனத்துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு போதுமான உபகரணங்கள் நவீன தொழில்நுட்பத்தில் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக இதன் மூலம் தெரிய வருகிறது. ட்ரோன் கேமரா மூலம் ஒரு சில இடங்களில் தணிக்கை செய்வது நடந்து கொண்டிருந்தாலும் பொதுவாக டிரோன் கேமரா அனைத்து மாவட்டங்களிலும் இல்லை என்பதே உண்மை. அதேபோன்று வாக்கி டாக்கி போன்றவை வனத்துறையினரிடம் இருப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. நவீன தகவல் பரிமாற்றக்கருவிகள் இருந்திருந்தால் வனப்பணியாளர்கள் தாக்கப்படும்போது உடனே தங்களுடைய உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கமுடியும். ஒருசில இடங்களில் தகவல் தொழில்நுட்பம் முறையாக செயல்படவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. வனத்துறை என்ற ஒரு துறை இல்லை என்றால் இந்த நாடு மட்டுமல்ல இந்த உலகமே அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும். உலக அளவில் பல மாநாடுகள் புவி வெப்பமயமாதல் என்பது பற்றி நடந்துகொண்டிருக்கிறது. புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணம் மரங்கள் வெட்டப்படுவதேயாகும். ஆனால் இது புரியாமல் பலர் வனத்துறையினரை தாக்குவது வேதனைக்குரியதாகும். வனத்தையும் வன உயிரினங்களையும் காக்கும் வனப்பணியாளர்களை போற்ற வேண்டாம். தூற்றாமலும் தாக்காமலும் இருந்தாலே போதும்.
No comments:
Post a Comment