மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் 09.01.21
கொரோனா தொற்று காரணமாக நடத்தப்படாமல் இருந்த தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் தற்போது அரசால் அனுமதிக்கப்பட்ட தளர்வுகளால் சிறப்பு பொதுக்குழு கூட்டமாக 09.01.2021 ஆம் தேதி விழுப்புரம் நகரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் திரு.R.முருகேசன் அவர்கள் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாவட்ட மற்றும் மாநில பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
திரு.R.இராஜா வனவர் அவர்கள் வரவேற்புரையும் திரு.M.பாபு வனச்சரக அலுவலர் அவரகள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி முன்னிலையும் வகித்தார். திரு.G.அருண்ராஜ் வனவர் அவர்கள் முன்னிலை வகித்து நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார். திரு.D.விஸ்வநாதன் வனவர் அவர்களால் நன்றியுரை தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் பல்வேறு காலகட்டங்களில் பணியின்போது வீரமரணம் அடைந்த மற்றும் உயிர்நீத்த அனைவரின் ஆத்மா சாந்தியடைய மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பிரதிநிதிகள் தங்கள் மாவட்டங்களில் உள்ள உறுப்பினர்களின் கருத்துக்களை எடுத்துக்கூறினர்.
அதன் விபரம் பின்வருமாறு
வனக்காப்பாளர் நிலையில் இருந்து வனவராக பதவி உயர்வு பெற ஊக்கமும் உதவியும் செய்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் பத்தாண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு இன்றி வனக்காப்பாளராக பணிபுரிந்து வருபவர்களின் நிலையினை கருத்தில்கொண்டு 2019 - 2020 ஆண்டிற்கான வனவர் பதவி உயர்வு பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
சீருடைப்பணியாளர்களுக்கு குற்றத்தாள் வழங்கப்படுவதற்கு முன் குற்றம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மாவட்ட அல்லது மண்டல அளவில் குழு அமைக்கப்பட்டு அவர்களின் விசாரணைக்குப்பின் முடிவு எடுக்கப்படவேண்டும் என தெரிவித்தனர். மலைப்படி வழங்குவதில் ஒருசில இடங்களில் குளறுபடி உள்ளதாக எடுத்துரைக்கப்பட்டது.
தொழில்நுட்ப ரீதியாக வனத்துறை மேம்பாடு அடையவில்லை என எடுத்துரைக்கப்பட்டது. குற்ற எதிரிகளை கண்டுபிடிக்க தேவையான தொழில்நுட்ப வளர்ச்சி (செல்பேசி மூலம் இருப்பிடம் போன்றவற்றை அறிதல், வாகன விபரங்களை பெறுதல்) வனத்துறையில் இல்லாததால் பிறதுறையை அணுகவேண்டி உள்ளது.
கல்வராயன் மலைப்பகுதியில் பணிபுரியும் பணியாளர்கள் மீது எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைகளை தவிர்க்கவேண்டும் எனவும் கல்வராயன் மலையில் பணிபுரியும் பணியாளர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டது. கல்வராயன் மலையில் வனப்பகுதி, தனியார் நிலம் மற்றும் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலம் என பாகுபாடு செய்ய இயலாத நிலை பல இடங்களில் உள்ளது. எனவே வனத்துறைக்கு சொந்தமான இடங்களை அளவீடு செய்து அவற்றை காப்புக்காடாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் போதுமான பணியாளர்களை பணியமர்த்தவேண்டும் எனவும் (1000 எக்டருக்கு ஒரு வனக்காப்பாளர் மற்றும் ஒரு வனக்காவலர்) தெரிவிக்கப்பட்டது.
நிர்வாக காரணம் எனவும் பொதுநலன் கருதி எனவும் பணியிடமாறுதல் செய்வதை கைவிடவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கோவை மாட்டத்தில் உள்ள சங்க உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது எனவும் உறுப்பினர் சந்தா ஒவ்வொரு வருடமும் பெறப்படுகிறது எனவும் காலமுறை கூட்டம் நடத்தப்பட்டு உறுப்பினர்களின் பல்வேறு கோரிக்கைகள் மாவட்ட அளவிலேயே உரிய அலுவலர்களை அணுகி களையப்படுகிறது எனவும் அம்மாவட்டத்தின் தலைவர் திரு.சிவப்பிரகாசம் அவர்கள் தெரிவித்தார். இதே போன்று அனைத்து மாவட்டங்களிலும் செயல்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
நீண்ட கால கோரிக்கைகளான சரக வாகனங்களுக்கான எரிபொருள் உயர்த்தி வழங்குதல், இருசக்கர வாகனம் வனவர் மற்றும் வனக்காப்பாளர்களுக்கு வழங்கவேண்டும் எனவும், நவீன படைக்கலன்கள் வழங்கப்படவேண்டும் எனவும் சீருடைப்பணியாளர்களுக்கு ஒருங்கிணைந்த அடுக்குமாடி குடியிருப்பு நகரப்பகுதிகளில் அமைத்து தரவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
வனத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எந்த வகையான மரங்களை வெட்டுவதற்கும் வனத்துறையின் அனுமதி பெறவேண்டும் என அரசு அறிவிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மாநில மரமான பனைமரத்தினை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
வீரமரணம் அடையும் சீருடைப்பணியாளரின் குடும்பத்திற்கு உடனடியாக கருணை அடிப்படையில் அரசு வேலையும் உரிய இழப்பீடும் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
No comments:
Post a Comment