மாநில செயற்குழு கூட்டம் 06.03.2021

மாநில செயற்குழு கூட்டம் 06.03.2021

 தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் 06.03.2021 ஆம் தேதி சனிக்கிழமை சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நடைபெற்றது. காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்படவேண்டிய கூட்டம் 11.30 மணிக்கு மேல் ஆரம்பிக்கப்பட்டது. கூட்டமானது நடேசன் ஹால் வின்சென்ட் பேருந்து நிறுத்தம் சேலம் என்னுமிடத்தில் நடைபெறும் என அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்தது பல்வேறு காரணங்களால் வாழப்பாடிக்கு மாற்றப்பட்டதால் கூட்டம் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சொற்ப எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருந்ததாலும் கூட்டம் ஆரம்பிக்க தாமதமானது. நேரம் செல்லச்செல்ல நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் திரளாக வந்து கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு திரு.கே.சிவப்பிரகாசம் மாநில தலைவர் அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றினார்.  மற்றும் ஒவ்வொரு கிளைச்சங்கத்திலிருந்தும் அதன் பிரதிநிதிகள் தங்களுடைய கருத்துக்களையும் அவர்களது மாவட்டத்திலுள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் எடுத்துரைத்தனர். அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

செயற்குழு கூட்டத்தில் மாநில தலைவர் அவர்களுக்கு உதவும்பொருட்டு அவருக்கு அளிக்கப்பட்டுள்ள தனிப்பட்ட அதிகாரத்தின்படி நியமன உறுப்பினர்கள் அதாவது இரண்டு மாநில அமைப்பு செயலாளர்கள் (வடக்கு மண்டலம் திரு.எம்.பாபு, வனச்சரக அலுவலர், விழுப்புரம் மற்றும் தெற்கு மண்டலம் திரு.எம்.பி.செந்தில்குமார், வனச்சரக அலுவலர், திருநெல்வேலி) மூன்று மண்டல அமைப்பு செயலாளர்கள் (மண்டலம் 1 திரு.கே.கேசவன் தூத்துக்குடி, மண்டலம் 2 திரு.கே.ஜே.சாந்தகுமார், வனச்சரக அலுவலர், தேனி, மண்டலம் 3 திரு.கே.முருகானந்தன், வனச்சரக அலுவலர், கள்ளக்குறிச்சி)  மற்றும் ஒரு மண்டல அமைப்பு செயலாளர் தலைமையிடம் (திரு.எ,கிளமண்ட் எடிசன், வனச்சரக அலுவலர், சென்னை) என ஆறு  நியமன உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர். 

அவ்வாறு நியமனம் செய்யப்பட்டவர்கள் அனைவரும் வனச்சரக அலுவலர்களே என்பது குறிப்பிடத்தக்கது. வனச்சரக  அலுவலர்கள் மட்டுமே வன அலுவலர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் கிடையாது என்றும் வனவர் மற்றும் வனக்காப்பாளர் நிலையிலிருந்தும் நியமன உறுப்பினர்களை நியமித்திருக்கலாம் என்ற கருத்து பரவலாக இருந்தது. 

குறிப்பு

தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கம் என்பது அனைவருக்குமான சங்கம் என்பதை கருத்தில்கொன்டு மாநில தலைமை மற்றும் மாவட்ட தலைமை செயல்பட வேண்டும் எந்த ஒரு தீர்மானமோ ,முடிவோ எடுப்பதற்கு முன்பு சக நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.



மாநிலத்தலைவர் அவர்கள் வனக்காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கவேண்டும் எனவும் அதாவது வனக்காவலர்கள் கடந்த 3 மற்றும் 4 ஆண்டுகளாக வனக்காவலர்களாகவே பணிபுரிந்து வருவதாகவும் அதற்கு முன்னர் அவர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த ஊதியத்தில் தோட்டக்காவலர் மற்றும் மிகைப்பணியி்ட தோட்டக்காவலர்களாக பணிபுரிந்து வந்ததால் உடனடியாக வனக்காவலர்களாக பதவி உயர்வு வழங்கிடவேண்டும் எனவும் அவர்களது ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்படவேண்டும் எனவும் எடுத்துரைத்தார்.

அதேபோன்று நேரடி நியமன வனக்காப்பாளர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக   வனக்காப்பாளர்களாக பணிபுரிந்து வருவதாகவும் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். அதற்கு பதிலளித்த மாநிலத்தலைவர் அவர்கள் தற்போதுதான் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் எனவே இது குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் வனக்காப்பாளர்களுக்கு விதிமுறைகளை தளர்த்தி வனவராக பதவி உயர்வு கிடைக்க முழு வீச்சில் முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்

வனக்காப்பாளர்கள் ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது இதற்கான முயற்சி எடுக்கப்பட்டும் இதுவரை மாற்றியமைக்கப்படவில்லைஎன பலரும் கருத்து தெரிவித்தனர் எனவே தற்போது வனக்காப்பாளரின் ஊதிய விகிதத்தை மாற்றி அமைக்க முழுவீச்சில் ஈடுபடவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது வனவர் மற்றும் வனச்சரக அலுவலர் ஆகியோருக்கு ஒரு நபர் குழுவில் ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டுப் பேசிய பலரும் வனக்காப்பாளர்கள் மட்டும் வஞ்சிக்கப்படுவதாக தெரிவித்தனர். அவர்களின் தகுதிக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படாமல் மிகவும் குறைவாகவே வழங்கப்படுவதாகும் தெரிவித்தனர்

பல்வேறு காரணங்களால் வனவர் நிலையிலிருந்து வனச்சரக அலுவலராக பதவி உயர்வு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஒருசிலர் சுட்டிக்காட்டியதற்கு விரைவில் பதவி உயர்வு கிடைக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

தற்போதைய காலகட்டத்தில் வன உயிரினங்களால் பயிர்சேதம் ஏற்படுவதையும் மனித வன உயிரின மோதல் ஏற்படுவதையும் கவனத்தில் கொண்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. மனித வன உயிரின மோதல் உள்ள பகுதிகளில் அதற்கென தனியாக குழு அமைத்து கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. பணியின்போது வன உயிரினங்களால் ஏற்படும் பாதிப்புகளால் மரணமடையும் பணியாளர்களின் குடும்பத்திற்கு தேவையான நிதி உதவியை வழங்குவதோடு ஒரு வருட காலத்திற்குள் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கவேண்டும் எனவும் அதற்காக அரசாணை வெளியிடப்படவேண்டும் எனவும் வலியுறுத்தி பேசினார்கள்.

சென்னை மாநகரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம். திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் பாம்பு மற்றும் குரங்கு போன்றவற்றை மீட்கும் பணிகளுக்கு போதுமான பணியாளர்கள் மற்றும் மீட்புப்பணியில் பயிற்சி பெற்ற பணியாளர்கள் இல்லை எனவும் ஒவ்வொரு தாலுக்காக்களிலும் வன உயிரின மீட்புக்குழு ஆரம்பிக்கப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. தற்போது குரங்கு பாம்பு மான் மயில் போன்ற உயிரினங்கள் வனப்பகுதியில் மட்டுமல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி நடமாடுகின்றன. இவ்வாறான சூழலில் அவற்றின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே அவற்றை மீட்கும் பணியில் ஈடுபட ஒவ்வொரு தாலுக்காவிற்கும் ஒரு குழு அமைக்கப்படவேண்டியது அவசியமான ஒன்றாகும். நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள தனியாக சீருடைப்பணியாளர்களை நியமனம் செய்யவேண்டும் எனவும் அவ்வாறு நியமனம் செய்யும்பட்சத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளை இன்னும் திறம்பட செய்யமுடியம் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டது 

தற்போது வனச்சரக அலுவலர்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் என்பது மிகவும் குறைவாக வழங்கப்படுவதாகவும் அதனை உயர்த்தி தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது அதே போன்று அனைத்து நிலைப்பணியாளர்களுக்கும் வாகனம் மற்றும் எரிபொருள் வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

1000 எக்டர் பரப்பளவிற்கு ஒரு காவல் சுற்றுப்பகுதி என மாற்றியமைக்கப்படவேணடும் எனவும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலைப்பகுதியை காப்புக்காடாக மாற்றவேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு போதுமான ஆயுதங்கள் வழங்கப்படவேண்டும் எனவும் ஆயுதங்களை கையாள்வதற்கு போதுமான பயிற்சி அளிக்கவேண்டும் எனவும் நக்சல் மற்றும் வனஉயிரின குற்றம் அதிகமுள்ள பகுதிகளில் அதற்கென சிறப்பு பயிற்சி பெற்ற பணியாளர்கள் குழு அமைக்கப்படவேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.  

தற்காலிக பணியிடைநீக்கம் செய்யப்படும்போது அந்த பணியாளருக்கு பிழைப்பூதியம் வழங்கப்படவேண்டும் என்பது விதி. ஆனால் பெரும்பாலான இடங்களில் பிழைப்பூதியம் வழங்கப்படுவதில்லை எனவும் விசாரணை நடத்தப்படாமல் காலம் தாழ்த்துவதாகவும் இதனால் பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கப்பட்டது. தேவையற்ற பணியிடமாறுதல் பல இடங்களில் வழங்கப்படுவதாகவும், கலந்தாய்வு முறையில் பணியிடமாற்றம் செய்யப்படுவதில்லை என்றும் கூறப்பட்டது. குற்றத்தாள் வழங்கப்படுவதற்கு முன்னரும் மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்படுவதற்கு முன்னரும் பணியாளரிடம் உரிய விளக்கம் பெறப்படுவதில்லை என்றும் எடுத்துரைக்கப்பட்டது. ஒருசில இடங்களில் அமைச்சுப்பணியாளர்கள் சீருடைப்பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்றும் எடுத்துரைக்கப்பட்டது.

அனைத்து மாவட்டங்களிலும் சங்கத்திற்கு கட்டிடம் தேவை எனவும் எடுத்துரைக்கப்பட்டது. புதிதாக நேரடியாக நியமனம் செய்யப்பட்டுள்ள வனச்சரக அலுவலர்களுக்கு 26 நாட்களுக்கு ஊதியம் ஒருசில வனக்கோட்டத்தில் வழங்கப்படாமல் உள்ளதாகவும் அதனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என எடுத்துரைத்தனர். வனத்துறையினரால் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளை ஓராண்டிற்குள் ஆய்வு செய்து முடிக்கவேண்டும் என வனச்சரக அலுவலர்கள் கேட்டுக்கொண்டனர்.

வனத்துறையில் தற்போது மகளிர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் மகளிருக்கென தனியாக நவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த வனக்காவல் நிலையங்கள் அமைத்து தரவேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

வனசோதனை சாவடிகள் பல இடங்களில் பாதுகாப்பான கட்டிடங்கள் இல்லாமல் உள்ளது. எனவே அனைத்து வன சோதனை சாவடிகளுக்கும் நவீன வசதிகளுடன் கூடிய கட்டிடம் கட்டித்தரவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இது தவிர பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் பணியாளர்கள் எடுத்துரைத்தனர். 

மேலும் தற்போதைய மாநிலத்தலைவர் மற்றும் ஒருசில நிர்வாகிகள் ஏற்கனவே இருந்த மாநில நிர்வாகம் வனக்காப்பாளர்களின் ஊதிய உயர்வுக்கு முயற்சிக்கவில்லை என்றும் கடந்த ஆறு ஆண்டுகளாகவே சங்கம் முறையாக செயல்படாமல் இருந்ததாகவும் மாவட்ட அளவில் முழு கட்டமைப்புடன் இல்லை என்றும் கூறியது அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் குறைகூறுவது போல் இருந்தது.

குறிப்பு

மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் குறைகூறுவதை தவிர்த்து அனைவரும் ஆக்கப்பூர்வமாக சிந்தித்து செயல்படவேண்டும். ஒரு கோரிக்கை வைக்கப்படும்போது அது ஒருதலை பட்சமாக இருக்கக்கூடாது என்பதை மனதில் வைத்து தற்போது முன்னெடுக்கப்படும் கோரிக்கைகள் தொடர்முயற்சி செய்தால் மட்டுமே வென்றெடுக்க முடியும் என்பதை கருத்தில்கொன்டு மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் செயல்படவேண்டும்.

செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு தந்த வனச்சரக அலுவலர் வாழப்பாடி வனச்சரகம் அவர்களுக்கும் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த அனைத்து பணியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கூட்டம் இனிதே முடிவடைந்தது.   

1 comment:

  1. நியமன பதவிகள் அனைத்தும் வனச்சரக அலுவலர்களுக்கே தரப்பட்டுள்ளது என்பது தவறான தகவல், தூத்துக்குடி மண்டல அமைப்பு செயலாளர் திரு. கேசவன் ஒரு நேரடி நியமன வனவர்

    ReplyDelete