வனத்துறை என்பது வனம் மற்றும் அதனைசார்ந்த பகுதிகளை பாதுகாப்பது மற்றும் மேலாண்மை செய்ய உருவாக்கப்பட்ட ஒரு துறையாகும். பாதுகாப்பு மற்றும் மேலாண்மை செய்ய ஏதுவாக வனச்சட்டங்கள் காலத்திற்கு ஏற்றவாறு இயற்றப்பட்டு, மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வனச்சட்டம் 1882 (5/1882) இல் முகப்புரையில் "தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள காடுகளை பாதுகாப்பதும் நிர்வகிப்பதும் அவசியமாக இருப்பதால் இச்சட்டம் இயற்றப்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
வனத்துறையில் நிர்வாக காரணங்களுக்காகவும், பாதுகாப்பு பணியை மேம்படுத்தவும் பல்வேறு பிரிவுகள் உள்ளன. பாதுகாப்பு பிரிவில் உள்ள ஒரு அங்கம் தான் வனப்பாதுகாப்பு படை என்பது. வனப்பாதுகாப்பு படை என்ற பெயரிலேயே பாதுகாப்பு என்ற சொல் உள்ளது. எனவே இவர்கள் பணியும் வனத்தை பாதுகாப்பது என்பது தெரிகிறது. வனப்பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் அவர்களின் பணி தொடர்பாக வனத்துறையின் இணையதளத்தில் உள்ள செய்தி
தற்போதைய சூழலில் பொதுவாக எந்த மாதிரியான பணியினை செய்கிறார்கள் என்பது பற்றிய ஒரு சிறிய விளக்கம்.
வனப்பாதுகாப்பு படையினர் ஒரு சில இடங்களில் பாதுகாப்பு பணிக்கு உதவுவது, குற்றங்களை கண்டுபிடிக்க உதவுவது போன்ற செயல்களை செய்கின்றனர். மற்றும் குற்றங்களையும் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களையும் கண்டுபிடிக்கின்றனர். ஆனால் அது மிகவும் சொற்பமானதாகவே உள்ளது. பெரும்பாலான இடங்களில் வனப்பகுதியில் சென்று குற்றம் நடந்துள்ளது என உயர் அலுவலர்களுக்கு அறிக்கை செய்கிறார்கள். வனப்பகுதிக்கு செல்லும்போது சம்பந்தப்பட்ட பணியாளர்களை அழைத்துச் சென்றால் குற்றம் கண்டுபிடிப்பதிலும் குற்ற எதிரி யாராவது இருந்தால் அவர்களை அடையாளம் காணவும் உதவியாக இருக்கும். ஆனால் அவ்வாறு செய்யாமல் குற்றம் நடந்துள்ளது என்றும் எந்த இடம் என்பதை தோராயமாக கூறும் வனப் பாதுகாப்பு படையினர் குற்ற சம்பவம் நடந்த இடத்தை பல நேரங்களில் துல்லியமாக கூறுவதும் இல்லை. குற்ற எதிரி விபரமும் கூறுவதில்லை. அறிக்கை செய்வதில் கவனம் செலுத்தும் வனப்பாதுகாப்பு படையினர் குற்ற எதிரியை கண்டுபிடிப்பதிலும் குற்ற எதிரி தொடர்பான தகவல்களை திரட்டுவதிலும் போதிய கவனம் செலுத்துவது இல்லை.
வனப்பாதுகாப்பு படையினர் ரகசியல் தகவல் அடிப்படையில் சென்று குற்ற சம்பவம் நடந்த இடத்தை கண்டுபிடித்ததாக அறிக்கை செய்கின்றனர். ரகசிய தகவல் அடிப்படையில் குற்றச்சம்பவம் நடந்த இடத்தை அறியும்போது குற்ற எதிரியின் விபரம் மட்டும் ரகசிய தகவலில் கிடைக்காமல் போவது எப்படி என்கிற இயல்பான சந்தேகம் பொதுவாக எழுகிறது. பொதுவாக அவர்களின் அறிக்கையில் குற்ற எதிரியின் விபரம் இருப்பதில்லை. ஒருசில நேரங்களில் சாதாரணமாக பொதுமக்கள் தாங்கள் நடந்து செல்லும்போது பார்க்கும் சம்பவத்தையோ அல்லது தாங்கள் அறிந்த செய்தியினையோ தகவலாக வனத்துறையினருக்கு தெரிவிப்பார்கள். அந்த தகவலில் முழுமையான விபரம் அதாவது குற்றம் யாரால் செய்யப்பட்டது, எப்போது செய்யப்பட்டது, குற்றச்சம்பவத்தில் தொடர்புடைய பொருட்கள் விபரம் போன்றவை இடம்பெறாது. தகவலின் அடிப்படையில் குறிப்பிட்ட அந்த இடத்திற்கு சென்று சம்மந்தப்பட்ட பணியாளர்கள் இடத்தை தணிக்கை செய்வது, விசாரணை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு ஒருசில நேரங்களில் குற்றத்தை கண்டுபிடிப்பது, சம்மந்தப்பட்டவர்களை கண்டுபிடிப்பது போன்றவை நடைபெறும்.
ஆனால் ரகசிய தகவலில் குற்றம் தொடர்புடைய போதுமான தகவல் இருக்கவேண்டும். அதாவது குற்றச்சம்பவம் மற்றும் குற்ற எதிரிகள் விபரம் போன்றவை. தகவல் என்பதற்கும் ரகசிய தகவல் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. ரகசிய தகவல் தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் மற்றும் அவர்களது தகவல் மற்றும் அவர்களைப்பற்றிய விபரம் யாருக்கும் தெரிவிக்கப்படுவதில்லை. (1872 இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 124 மற்றும் 125)
G.O Ms. No 4 Environment and Forests (FR 14) Department Dt 22.01.2013 இல் Forest Protection Squads are mainly supplementing the Beat and Section system of protection என குறிப்பிடப்பட்டுள்ளது. (அரசாணை காண்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்) அதாவது பீட் மற்றும் பிரிவு ஆகியவற்றிற்கு கூடுதலாக உதவுவது அல்லது துணையாக இருப்பது என பொருள் கொள்ளலாம்.
சரகப்பணியாளர்களின் பொதுவான பணி யாதெனில் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட பீட்டில்/ பிரிவில்/ வனச்சரகத்தில் பாதுகாப்பு பணி மேற்கொள்வது, வனக்குற்றங்கள் நடைபெறாமல் இருக்க ரோந்துப்பணி மேற்கொள்வது, வனக்குற்றங்கள் ஏதும் நடைபெற்றால் அதில் சம்பந்தப்பட்ட குற்ற எதிரிகளை கண்டுபிடிப்பது, வழக்கு பதிவு செய்வது, நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்வது, வனக்குழு தொடர்பான பணிகளை மேற்கொள்வது, அரசால் அறிவிக்கப்படும் திட்டப்பணிகளை மேற்கொள்வது மற்றும் அவ்வப்பொழுது உயர் அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்படும் பிற பணிகளை மேற்கொள்வது போன்றவை ஆகும். மேற்காணும் பணிகளுக்கு வனப்பாதுகாப்பு படையினர் துணையாக இருக்கவேண்டும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் மேற்கண்ட இப்பணிகளில் சரகப்பணியாளர்களுக்கு வனப்பாதுகாப்பு படையினர் துணையாக இருக்கிறார்களா என்றால் பெரும்பாலும் இல்லை என்றே கூறலாம்.
பொதுவாக வனப்பாதுகாப்பு படையில் பணிபுரியும் பெரும்பாலானவர்கள் வனக்காவலராக, வனக்காப்பாளராக, வனவராக மற்றும் வனச்சரக அலுவலராக என அனைத்து நிலையின்போதும் வனப்பாதுகாப்பு படையிலேயே நிரந்தரமாக பணிபுரிகின்றனர். பதவி உயர்வு பெறும்போது பெயரளவிற்கு ஓரிரு மாதங்கள் அல்லது ஓரிரு வருடங்கள் வனப்பாதுகாப்பு படையில் இருந்து வெளியில் சென்று பணிபுரிந்துவிட்டு பின்னர் மீண்டும் வனப்பாதுகாப்பு படைக்கே வந்து விடுகின்றனர். இந்நிலை மாற்றப்படவேண்டும்.
No comments:
Post a Comment