வன தியாகிகள் தினம் (Forest Martyrs Day) செப்டம்பர் 11

நாட்டின் வனம் மற்றும் வனஉயிரினங்கள் பாதுகாப்பின்போது உயிர் தியாகம் செய்தவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் இந்தியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 11 ஆம் தேதி தேசிய வன தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது

தமிழ்நாடு வனத்துறை தேசிய வனத்துறையுடன் இணைந்து செயல்படுவதன் பலனாக தமிழகத்தில் 2500 க்கும் மேற்பட்ட சதுர கிலோ மீட்டர் வனப்பரப்பு அதிகரித்துள்ளது. இதற்கு அர்ப்பணிப்பு உணர்வுகொண்ட வன ஊழியர்களும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் அவர்களது குடும்பங்களுமே காரணம் ஆகும்.

தமிழக வனத்தைக் காக்க, வனத்துறை ஊழியர்கள் பலர் தங்கள் உயிரையும் துச்சமாக நினைத்து கடமையாற்றி உள்ளனர். அதனாலேயே ஏராளமான குற்றங்கள் தடுக்கப்பட்டு, வனமும் வனப்பகுதியும் பாதுகாக்கப்பட்டுள்ளது. மக்களும் வன உயிரின மோதல்களில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனர். 

நாட்டின் முக்கியமான துறையான வனத்துறை இதுபோன்ற தியாகிகளால் பெருமை கொள்கிறது.

வனத்துறைக்காக உயிர் நீத்த பலரது வாரிசுகள் வனத்துறைக்கு சேவையாற்ற வந்து கொண்டிருக்கிறார்கள். இது ஆரோக்கியமான விஷயம். 

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு வனத்துறை சார்பில் கோவை உயர் பயிற்சியகத்தில் அனுசரிக்கப்படும் இந்நிகழ்வில் வன தியாகிகளுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டு, அவர்களது குடும்பத்தினர் கவுரவிக்கப்படுகின்றனர். 

தமிழகத்தில் ஏராளமான வனத்துறை ஊழியர்கள் உயிரிழந்திருந்தாலும், தியாகிகள் தினம் அனுசரிக்கப்படவில்லை. இந்நிலையில், வனத்துறை ஊழியர்களின் கோரிக்கையை பரிசீலித்து அதற்கான ஆணையை தமிழக அரசு வெளியிட்டது. அதன் அடிப்படையில் தற்போது ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் வன தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

 

தமிழகத்தில் வனத்தையும், வனஉயிரினங்களையும் பாதுகாக்க இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களது உயிரை நீத்துள்ளனர். இன்று 11.09.2024 கோவையில் நடந்த வன தியாகிகள் தின நிகழ்ச்சிக்கு வனத்தியாகிகளின் குடும்பங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் சில குடும்பங்கள் மட்டுமே பங்கேற்றன. இந்நிகழ்வில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் வனத்துறை உயர் அலுவலர்கள், ஓய்வு பெற்ற வன அலுவலர்கள், பயிற்சியில் உள்ள வன அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டு தியாகிகளையும் அவர்களது தியாகங்களையும் நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தினர்.

மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள் 


வன அலுவலர்கள் சங்க மாநில தலைவர் அவர்கள்


பல்வேறு வனச்சரகங்கள் மற்றும் தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது 

விழுப்புரம் வனக்கோட்டம், செஞ்சி வனச்சரகம்


தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கம் சென்னை மாவட்ட கிளை


வனதியாகிகள் தின வரலாறு:

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 1730-ல் அப்போதைய மன்னராக இருந்த மகாராஜா அபய் சிங்கின் உத்தரவின் பேரில் தொழிலாளர்கள் கெஜார்லி மரங்களை வெட்டத் தொடங்கினர். இந்த மரங்கள் பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்த மக்களால் புனிதமாகக் கருதப்பட்டன. எனவே இந்த மரங்களை வெட்டும் நபர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அமிர்தா தேவி என்ற பெண் புனிதமான கேஜார்லி மரத்தின் மீது தனது தலையை வைத்துக்கொண்டார். அவர்கள் மரத்தை வெட்ட மாட்டார்கள் என்று நம்பினார். ஆனால் மன்னரின் தொழிலாளர்கள் மரத்தோடு அமிர்தா தேவியின் தலையையும் வெட்டினர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் அமிர்தாவின் குழந்தைகள் உட்பட 350 க்கும் மேற்பட்டவர்களை மன்னரின் தொழிலாளர்கள் கொன்றனர். இந்த துயர சம்பவம் ராஜா அபய் சிங்கின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அவர் உடனடியாக தனது ஆட்களை பின்வாங்கச் சொன்னார். பிஷ்னோய் மக்களிடம் நேரில் சென்று மன்னிப்பும் கேட்டுள்ளார். தொடர்ந்து அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட செப்டம்பர் 11ம் தேதியை ஒவ்வொரு வருடமும் நினைவுகூறும் வகையில் வன தியாகிகள் தினத்தை பிஷ்னோய் மக்கள் அனுசரித்து வந்தனர் என்று கூறப்படுகிறது.


No comments:

Post a Comment