இணையவழி பணியிடமாறுதலில் அநீதி இழைக்கப்படுகிறதா?
வனத்துறையில் பணியிடமாறுதல் என்பது 2022 ஆம் ஆண்டுவரை பணியிடமாறுதல் கோரும் விண்ணப்பம் மூலம் நேரடியாக உரிய அலுவலருக்கு விண்ணப்பித்து பணியிடமாறுதல் பெறப்பட்டது. இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் முறைகேடு நடப்பதாகவும் கருதி 2022 ஆம் ஆண்டு இணையவழி பணியிடமாறுதல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
2023 ஆம் ஆண்டு இணையவழியில் பணியிடமாறுதல் கோரி விண்ணப்பித்தபோது பலரால் விண்ணப்பிக்க முடியவில்லை. அதற்கான காரணம்
1 பணியாளர்களின் விபரம் முழுவதுமாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை.
2 பதிவேற்றம் செய்யப்பட்ட பலரின் பதிவுகள் முரணாக இருந்தது. பதவி உயர்வு பெற்றவர்களின் விபரம் மற்றும் பணிபுரியும் இடம் முழுமையாக பதிவேற்றம் செய்யப்படவில்லை.
3 காலிப்பணியிடங்கள் விபரம் சரியாக பதிவேற்றம் செய்யப்படவில்லை.
இருப்பினும் பலரது பணியிடமாறுதல் கோரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அவர்களுக்கு பணியிடமாறுதல் வழங்கப்பட்டது. ஒருசிலருக்கு விண்ணப்பித்த இடமும் பலருக்கு விண்ணப்பித்த வன மண்டலமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் விண்ணப்ப எண் அடிப்படையில் பணியிடமாறுதல் வழங்கப்படவில்லை என்றும் முன்னுக்குப்பின் முரணாக பணியிடமாறுதல் வழங்கப்பட்டதாகவும் பல பணியாளர்கள் தங்களது மனக்குமுறலை தெரிவிக்கின்றனர். தற்போது அதன் எதிரொலியாகத்தான் மேற்கண்ட செய்தி வாட்ஸ் அப்பில் வெளிவந்துள்ளது.
பல துறைகளில் கலந்தாய்வு மூலம் பணியிடமாறுதல் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும்போது சுமார் 6500 பணியாளர்களைக்கொண்ட வனத்துறையில் ஏன் இவ்வளவு குளறுபடி என நியாயமான கேள்வி எழுகிறது. ஒவ்வொரு முறையும் இணையவழி மூலம் மாறுதல் கோரும் பணியாளர்களின் என்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சுமார் 35 சதவீத பணியாளர்கள் மாறுதல் கோரி விண்ணப்பிக்கின்றனர். இதில் பணியாளர்களின் விபரம் முழுமையாக பதிவேற்றம் செய்யாததால் பலர் இன்றளவும் விண்ணப்பிக்க முடியாமல் உள்ளனர். ஒரு சிலர் பணியிடமாறுதல் கிடைக்காது என்ற நம்பிக்கையில் பணியிடமாறுதலுக்கு விண்ணப்பிக்காமல் இருக்கும் இடத்திலேயே பணிபுரிந்து வருகின்றனர். பணியிடமாறுதல் கோரி விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலோர் தங்களது குடும்பம் மற்றும் உற்றார் உறவினர்களை பிரிந்து வெளி மாவட்டங்களில் பணிபுரிவோர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு வேலைக்கு சென்றால் பெற்றோர் மற்றும் உறவினர்களை நன்றாக கவனித்துக்கொள்ளமுடியும் என்ற நம்பிக்கையில் பணியில் சேர்ந்து வெளி மாவட்டத்தில் பணி கிடைத்து அல்லது பதவி உயர்வில் வெளி மாவட்டத்திற்கு சென்று தனது குடும்பத்தையே கவனிக்கமுடியாமல் அவதியுறும் பணியாளர்களின் மன உளைச்சலை எவ்வாறு விவரிப்பது என்பது தெரியவில்லை.
ஒருபக்கம் பணியின் சுமை நாளுக்குநாள் கூடிக்கொண்டே செல்கிறது மறுபக்கம் குடும்ப உறவும் விரிசலாகிக்கொண்டே செல்கிறது.
எனவே சீருடைப்பணியாளர்களின் நிலையை சிந்தித்து பணியிடமாறுதலை முறைப்படுத்தவேண்டும் என எதிர்பார்க்கின்றனர் வனப்பணியாளர்கள். காட்சிகள் மாறும் என காத்திருக்கின்றனர்.
No comments:
Post a Comment